• October 29, 2026

தவெக வில்  இணைந்த சி. மகேந்திரன், மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்; இந்திய கம்யூனிஸ்டு செயலாளர்  வீரபாண்டியன் அறிக்கை

 தவெக வில்  இணைந்த சி. மகேந்திரன், மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்; இந்திய கம்யூனிஸ்டு செயலாளர்  வீரபாண்டியன் அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றியவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான சி. மகேந்திரன், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், “நடந்து முடிந்த தேர்தலில் தவெக சாதிய அரசியலைத் தோற்கடித்துக் காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெக-வில் இணைந்துள்ளேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்துப் பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. நான் தொடர்ந்து எனது பாரம்பரிய சிவப்புத் துண்டோடு தவெக-வில் செயல்பட விரும்புகிறேன்” என்றார்.

சி. மகேந்திரனின் இந்தத் கட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்த சி. மகேந்திரன், சமீபகாலமாகக் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். 

குறிப்பாக, கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தைக் குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயாரித்திருந்தனர்.

அத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் சி. மகேந்திரன் செயல்பட்டதாலேயே அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். 

தனது தவறுகளைக் களைந்து கொண்டு கட்சியுடன் தன்னைத் பொருத்திக் கொள்ளக் கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். இதன் மூலம், அவர் மீது கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை மிகச் சரியானது என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்”

இவ்வாறு மு. வீரபாண்டியன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *