தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை; உறவுக்கார வாலிபர் கைது
Oplus_16908288
தூத்துக்குடி 3-வது மைல், கந்தன் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சித்திரைவேலின் மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் வசித்து வருகிறார். திருமணமான மகனும் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று 28.10.2026 மதியம் சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சசிகலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சசிகலா அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சசிகலாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் டவுன் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சசிகலாவை கொலை செய்த நபராக உறவினர் முனீஸ் என்ற விக்னேஷ்வரன் என்பவர் கொலை நடந்த 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சசிகலாவின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் கையில் அரிவாளுடன் வீட்டை விட்டு வெளியேறிய காட்சி பதிவாகியிருந்தது. அக்காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலையாளி சசிகலாவின் உறவினரான தூத்துக்குடி அண்ணா நகர் 7-வது தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (எ) முனீஸ் (25) என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் கொலை நடந்த ஒரே மணி நேரத்தில் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ் குமார் தனது சித்தி சசிகலா வீட்டிற்கு அடிக்கடி சென்று பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்றும் மதியம் பணம் கேட்டு சென்றுள்ளார். சசிகலா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார்.
பின்னர், அருகிலுள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டுத் தனது வீட்டிற்குச் சென்றபோது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.







