• October 30, 2026

ஏப்ரல் 1 முதல் புதிய வருமானவரி சட்டம் அமல்; மத்திய அரசு அறிவிப்பு

 ஏப்ரல் 1 முதல் புதிய வருமானவரி சட்டம் அமல்; மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1, முதல் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

60 ஆண்டுகள் பழமையான ‘வருமான வரிச் சட்டம் 1961’-ஐ மாற்றியமைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

எளிமைப்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகள்

வரி செலுத்துவோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சட்டத்தின் மொழி நடை மாற்றப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சட்டத் தொகுதிகள் (Chapters) 47-லிருந்து 23-ஆக சுருக்கப்பட்டுள்ளன.

இதற்காக ‘படிவம் 33’ உட்பட 150-க்கும் மேற்பட்ட புதிய அதிகாரப்பூர்வ படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வரி விகிதங்களில் மாற்றமில்லை

புதிய சட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பிலோ அல்லது வரி விகிதங்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய மற்றும் புதிய வரி நடைமுறைகள் (Old & New Tax Regimes) தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

எச்.ஆர்.ஏ (HRA) சலுகை விரிவாக்கம்:

மாதச் சம்பளதாரர்களுக்கான வீட்டு வாடகைப் படி (HRA) வரிச் சலுகை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

50% வரி விலக்கு: ஏற்கனவே சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு மட்டும் இருந்த இந்தச் சலுகை, தற்போது ஐதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 40% என்ற அளவு தொடரும்.

நிபந்தனை: வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் இடையேயான ஒப்பந்த விவரங்களைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாகும்.

பான் (PAN) கார்டு கட்டாய வரம்பு உயர்வு:

பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு சமர்ப்பிக்கும் வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

சுப நிகழ்ச்சிகள்: திருமண மண்டபம் அல்லது ஹோட்டல் கட்டணங்கள் ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால் பான் எண் கட்டாயம் (முன்பு ரூ. 50,000).

அசையா சொத்துகள்: சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்யும் போது அதன் மதிப்பு ரூ. 20 லட்சமாக இருந்தால் பான் எண் குறிப்பிட வேண்டும் (முன்பு ரூ. 10 லட்சம்).

மத்திய அரசின் நோக்கம்: வரி தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி தாக்கல் செய்வதை ஊக்குவிக்கவும் இந்த ‘வருமான வரி விதிகள் 2026’ கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *