அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டி; அவரே வெளியிட்ட தகவல்
சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.
இதனால் காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.
என்னை பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகின்றனர்? எல்லா சாதிக்குமான பொது வேட்பாளர் நான். சொந்த பந்தம் என்று பார்த்தால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு. நான் எப்போதுமே பொது பொது வேட்பாளர்தான்.
இவ்வாறு சீமான் கூறினார்.

சட்டசபை தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட சீமான், அங்கு தோல்வியை சந்தித்தார். இதற்கிடையே, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தற்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







