100 நாள் வேலை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டு
கோவில்பட்டி அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பெரியதாய் என்பவர் உயிரிழந்தை தொடர்ந்து. கடந்த ஜூலை மாதம் அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு வெயிலாட்சி, லாவண்யா இருவரும் போட்டியிட்டனர். இதில் வெயிலாட்சி வெற்றி பெற்றார். இந்நிலையில் வெள்ளாளன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சூரியமினுக்கன் கிராமத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வெயிலாட்சிக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்று கூறி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் மறுத்து வருவதாக அக்கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக வேலை வழங்கவில்லை என்றும், வேலை கேட்டு சென்றால் வேலை வழங்க வாரம் தோறும் 120 ரூ கேட்பதாகவும், வேலை கேட்டு செல்லும் பெண்கள், முதியவர்களை அவறுதூறாக பேசி வருவதாகவும் அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், இதனால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்ட போது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.







