கோவில்பட்டி அருகே 126 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை சமுதாய நலக்கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டயர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார்.
மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.40.33 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினர். அவர் பேசுகையில் கூறியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் திட்டம் என்பது மாவட்டத்தின் ஒருகுறிப்பிட்டகிராமத்தில், அதாவது வட்ட தலைமையிடத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கி இத்திட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து முக்கிய அலுவலர்களும் அந்த கிராமத்திற்குச் சென்று, குறைகளை நேரில் கேட்டறிந்து, கிராமப் பொது மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்கின்றனர்.
மேலக்கரந்தை கிராமத்தில் இன்று மக்கள் தொடர்புமுகாம் நடத்தப்படுவதற்கு முன்னோடியாக கடந்த மாதம் 22ந்தேதி மனுக்கள் பெறப்பட்டன. அன்றைய தினத்தில் மொத்தம் 124 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 45 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு அதற்குரிய நலத்திட்டஉதவிகள் இன்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 79 மனுக்கள் தீர்வுகாணும் பொருட்டு பரிசீலனையில் உள்ளன.

முன்னோடி மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தவிர்த்து, அதற்கு பின்னர் இந்த மேலக்கரந்தை கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் வருவாய்த் துறை இலவச வீட்டுமனைப்பட்டா , இ-பட்டா, நத்தம் பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு அல்லாத பட்டாமாறுதல், உட்பிரிவு பட்டாமாறுதல், புதியகுடும்பஅட்டை, நகல் அட்டை, முதியோர் ஓய்வூதியம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணமும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக இலவச தையல் இயந்திரம், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறைசார்பாக முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் அமைக்கும் திட்டத்தின் கீழ் 5 ஹெச்.பி.சோலார் பம்ப் , பணி ஆணை, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் ,பயறு வகைகள் – இடுபொருட்கள், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக கன்று பராமரிப்பு பெட்டகம் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ.40.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
.
முன்னதாக மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
முகாமில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டயபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, மேலக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்துமுனியம்மாள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இம் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காட்சிபடுத்தப்பட்டன பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் வகையில் கேழ்வரகு கம்பு சோளம் நவதானிய பயிர் வகைகளும் இக் கண்காட்சியில் இடம் பெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர் இந்நிகழ்வில் கோட்டாட்சியர் மகாலட்சுமி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







