எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்,.
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது சி.டி. ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு தரவேண்டும் என்றும் நாளை ஜனாதிபதி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. தலைவர்கள் கட்டாயம் டெல்லிக்கு வரவேண்டும், வேட்பு மனுத்தாக்கலின் போது உடனிருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பேட்டியளித்த ஜெயக்குமார், ஒற்றை தலைமை வேண்டும் என்பதே பொதுக்குழுவின் முடிவு மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார். மேலும் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே விருப்பம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.உடன் இருந்தார்.







