கோவில்பட்டியில் புகையிலை பொருட்களுடன் 5 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் பெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ‘
அப்போது கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒரு ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சம்பந்தமாக சோதனை செய்த போது அந்த கடைமுன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 31), சாத்தூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (23), திருமங்கை நகரை சேர்ந்த தங்கமாரியப்பன் (55), புதுக்கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் லிங்கம் (57) , சங்கரலிங்கபுரம் பாண்டியன் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் , விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து 216 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ. 26,900/-ஐ பறிமுதல் செய்தனர்
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.







