கோவில்பட்டி, எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ,தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Oplus_16908288

கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய மேலாளர் ஜி. மலையாண்டி மேற்பார்வையில் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தீ விபத்துகள் ஏற்படக் காரணமான சூழ்நிலைகள், அவற்றைத் தடுக்கும் முறைகள், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் 101, 112 ஆகிய அவசர உதவி எண்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் தீயணைப்பு கருவிகள், சுவாசக் கருவி (Breathing Apparatus), மீட்புக் கருவிகள், உயிர்காக்கும் வளையங்கள் (Life Buoys), உயிர்காக்கும் மேலங்கிகள் (Life Jackets), தீயணைப்பு குழாய்கள் (Fire Hoses) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் பயன்பாடு செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தீ தடுப்பு ஒத்திகை (Mock Drill) நடத்தப்பட்டு, தீ விபத்து ஏற்பட்டால் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற வேண்டும், தீயை ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும், மீட்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவர்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பேராசிரியர்கள் விஜயகோபாலன், செல்வலட்சுமி, மற்றும் கற்குவேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் திட்ட அலுவலர்கள் ஜெய்சிங்கராஜ் மற்றும் சுசீலாவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 450 மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தீ விபத்துகளைத் தடுப்பது, அவசர காலங்களில் பாதுகாப்பாக செயல்படுவது மற்றும் மீட்புப் பணிகள் குறித்த நடைமுறை அறிவைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தீ பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.







