பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை; புதிய கல்வியாண்டு நாள்காட்டியில் தகவல்
2026-2027ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரப்பூர்வ நாள்காட்டியைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நாள்காட்டி மற்றும் விடுமுறை விபரங்கள் வருமாறு:
நடப்புக் கல்வியாண்டில், மொத்தம் உள்ள 365 நாள்களில் பள்ளி வேலை நாள்களின் எண்ணிக்கை 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 220 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வந்த நிலையில், தற்போது 10 நாள்கள் குறைக்கப்பட்டு விடுமுறை நாள்கள் 155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 22 நாள்கள் அரசு பொது விடுமுறை நாள்களாகும்.

புதிய நாள்காட்டியின்படி, ஒட்டுமொத்த மொத்த சனிக்கிழமைகளில் ஜூலை 19, செப்டம்பர் 19 மற்றும் டிசம்பர் 3 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் மட்டுமே பள்ளி வேலை நாள்களாக இருக்கும். மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16இல் தொடங்கி 23 வரை நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறையாகும். ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
நடப்புக் கல்வியாண்டின் கடைசி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
கிருஷ்ண ஜெயந்தி: செப்டம்பர் 4 (வெள்ளி) பண்டிகை வருவதால் வார இறுதி நாள்களுடன் சேர்த்து 3 நாள்கள் தொடர் விடுமுறை.
விநாயகர் சதுர்த்தி: செப்டம்பர் 14 (திங்கள்) பண்டிகை வருவதால் வார இறுதி நாள்களுடன் சேர்ந்து 3 நாள்கள் விடுமுறை.
ஆயுத பூஜை, விஜயதசமி: அக்டோபர் 19, 20 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் வருவதால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாள்கள் தொடர் விடுமுறை.

தீபாவளி: நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது.
பொங்கல்: ஜனவரி 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.







