1 வாக்கு வித்தியாசத்தில் தோற்ற பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந் தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பர். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்” என்று வாதிட்டார்.

உடனே நீதிபதிகள், “இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிகள் வகுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மூத்த வக்கீல், “இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும்போது, சரியான முகவரிக்குதானே அனுப்பி வைக்க வேண்டும். அது போல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தர விடவேண்டும்” என்றார்.







