மகளிருக்கு மாதம் ரூ.2,500, மீனவர்களுக்கு நிரந்தர வீடு ; தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்,’மக்களின் தேர்தல் அறிக்கை 2026′ என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தவெக தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
அந்த தேர்தல் அறிக்கையில் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு :-
*குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; 6 விலையில்லா சிலிண்டர்கள்; மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி; மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

*வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப்; 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்; தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்; அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை
*உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்; ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள்; ஏஐ (Artificial Intelligence) மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள் நடத்தப்படும்.
*நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி; பயிர்க் கடன்கள் தள்ளுபடி; MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500; 5 லட்சம் சோலார் பம்புகள்; தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100 சதவீத பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.
*குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்படும்.
*தடைக்கால நிவாரணம் ரூ.27,000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை; ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடு கட்டி தரப்படும்.
*முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு; நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்கப்படும்.

*2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம்; MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ‘மாஸ்டர் பிளான்’; தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம் வழங்கப்படும்.
*மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை (OPS); ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம் அளிக்கப்படும்.
*லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்; காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்; நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள் ஒதுக்கப்படும்.
மேற்கண்டவாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







