திருப்பூரில் விஜய் பிரசாரம்: வெயில் தாங்காமல் வேட்பாளர் உட்பட 9 பேர் மயங்கி விழுந்தனர்
தவெக தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக சேலம் 6 வழிச்சாலை வழியாக பிரசார வாகனத்தில் அவர் திருப்பூருக்கு வருகை தந்தார். பெருமாநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் காலை முதலே திரண்டிருந்தனர்.

திருப்பூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை வரவேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதேபோல், பிரசார களத்தில் காத்திருந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 9 பேர் அடுத்தடுத்து மயங்கினர்.
மயக்கமடைந்தவர்களுக்கு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாகத் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடும் வெயில் காரணமாகப் பிரசாரத்திற்குப் பொது மக்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் எனத் தவெக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பெண்கள் பலர் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.







