திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் ஆகியோர் இன்று (28-02-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எல்.ஏ., பொருளாளர் எம்.எஸ்.எ.சாஜஹான், முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல்ரகுமான், துணைத் தலைவர் கே.நவாஸ்கனி, எம்.பி., – கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதே போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று (28-02-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையின்போது மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, எம்.எல்.ஏ., பொருளாளர் கோவை உமர் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் உடன் இருந்தனர்..







