மொபட்டில் பெண் வைத்திருந்த 9 பவுன் நகை அபேஸ்
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தமிழ்செல்வி (45). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் 9 பவுன் நகை அடகு வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் தமிழ்செல்வி அந்த வங்கிக்கு சென்று, பணத்தை செலுத்தி அடகு வைத்திருந்த 9 பவுன் நகையை திருப்பினார். பின்னர் அந்த நகை, செல்போன் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு, அதனை மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

தொடர்ந்து தமிழ்செல்வி தனது வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் பழைய மார்க்கெட் ரோட்டில் உள்ள முட்டை கடை முன்பாக தனது மொபட்டை நிறுத்திவிட்டு, அங்கு முட்டை மற்றும் காய்கறிகளை வாங்கினார்.
பின்னர் அவர் திரும்பி வந்தபோது மொபட்டின் இருக்கைக்கு அடியில், நகை, செல்போனுடன் இருந்த கைப்பை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
தமிழ்செல்வி கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அவரை பின்தொடர்ந்து வந்து, மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியை உடைத்து திறந்து, நகை, செல்போனுடன் இருந்த கைப்பையை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்செல்வி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அ போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







