சிவகங்கை :பஸ்கள் மோதலில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி
Oplus_16908288
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே, இன்று மாலை காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பஸ்சும் மதுரை நோக்கி சென்ற அரசுப் பஸ்சும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது
இந்த விபத்து குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது :-
“சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று மாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 11 நபர்கள் இறந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயம்பட்ட நபர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







