நாய் குறுக்கே பாய்ந்தது: மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி கார் டிரைவர் பரிதாப சாவு; மனைவி படுகாயம்
கோவில்பட்டி சீனிவாசன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சங்கரநாராயணன் (வயது 58). கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கெங்காலட்சுமி (50). சம்பவத்தன்று சங்கரநாராயணன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி-கடலையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் பாய்ந்து ஓடியது. இதில் எதிர்பாராத விதமாக அந்த நாய் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் சங்கரநாராயணன் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி கெங்காலட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சங்கரநாராயணன் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







