தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில், தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.

இதன் காரணமாக, நாளை (செப். 5) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து, செப். 6 முதல் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்; செப். 9, 10 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் நாளை முதல் செப். 8 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேர மழைப் பொழிவு: இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வடசிறுவளூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் தலா 6 செ.மீ மழையும், விழுப்புரம் அவலூர்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.







