கோவில்பட்டியில் சுய தொழில் கடன் திட்டங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு; மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா பங்கேற்பு


தமிழக அரசின் குறு சிறு நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து தொழில் முனைவோருக்கான சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் உத்யம் சான்றிதழ் பதிவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை இன்று நடத்தின.
இந்த கருத்தரங்கு கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடந்தது. கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம்,நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

சுயதொழில் கடன் திட்டங்கள்
தூத்துக்குடிமாவட்ட தொழில் மைய மேலாளர் அ.ஸ்வர்ணலதா சுய தொழில் கடன் திட்டங்கள், மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது :-

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் பற்றி வட்டார அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் கோவில்பட்டியில் இந்த கருத்தரங்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் இதுபோல் மாவட்ட தொழில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன அந்தந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இந்நிறுவனம் உதவியாக இருக்கிறது. சுய தொழில், சேவை தொழில், உற்பத்தி தொழில் போன்றவற்றுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் பெற முடியும்.
தமிழக அரசின் ஐந்து திட்டங்கள் மத்திய அரசின் இரண்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சுயதொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெறலாம். உடனுக்குடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா பேசினார்.
மேலும் பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அ. ஸ்வர்ணலதா பதில் அளித்தார்.
60 கோடி ரூபாய் கடன் இலக்கு
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காந்திநாதன் கூட்டுறவு வங்கிகளின் கடன் திட்டங்கள் குறித்து பேசினார்.அவர் கூறியதாவது :-

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் உள்ளன கோவில்பட்டியில் மட்டும் 3 கிளைகள் செயல்பட்டு வருகின்றன தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி எங்கள் வங்கியில் வழங்கப்படும்.
சரியான ஆவணங்கள் இருந்தால் விண்ணப்பித்த இரண்டு நாட்களில் கடன் உதவி பெறலாம். தமிழக அரசின் மாநிலத்துடன் கூடிய கடன் திட்டங்களை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி வருகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு குறைந்தபட்ச இலக்காக 60 கோடி ரூபாய் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலும் வழங்க தயாராக இருக்கிறோம்.
தொழில் மையம் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு உரிய ஆவணங்களுடன் எங்களை நாடினால் இரண்டு நாட்களில் மானியத்துடன் கூடிய கடன் பெறலாம். தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட வங்கியை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் காந்திநாதன் பேசினார்
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் நாகஜோதி உத்யம் சான்றிதழ் பதிவு குறித்து விளக்கினார்.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் (SPOC) அதிகாரி கார்த்திகேயன் ‘செட் ‘சான்றிதழ் பதிவு மற்றும் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பொது மேலாளர் சீனிவாசன்,தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை வள அலுவலர் சேகர், ஜிவிஎன் கல்லூரி பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரா, ராதாகிருஷ்ணன்,விஜயலட்சுமி,ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடராஜன்,மணிகண்டன்,கபிலரசன், அருண், ஜே.. சி. ஐ. அமைப்பை சேர்ந்த ஷியாம் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜி.வி. என். கல்லூரி பேஷன் டெக்னாலஜி, வணிகவியல், கணினி அறிவியல் துறை மாணவர்கள்,வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள்,இளம் தொழில் முனைவோர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் ஞானபிரகாசி நன்றி கூறினார்







