கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலநாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் குரு.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன்கள் மாசிலாமணி, துரை மற்றும் குருநாதன் என்பவரது மகன் செல்லதுரை ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு குரு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று 1.9.2026 அன்று நீதிபதி தாண்டவம் இறுதி தீர்ப்பை வழங்கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, 3 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தாண்டவம் உத்தரவிட்டார்.







