கோவில்பட்டியில் தம்பதி தவறவிட்ட 32 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த போலீசுக்கு குவியும் பாராட்டுகள்

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 70). இவர் தனது 2 மகன்களுடன் சென்னையில் எலக்ட்ரிக்கல் பொருள்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார்.
மாதத்தில் 20 நாட்கள் சென்னையிலும் 10 நாட்கள் கோவில்பட்டியிலும் இருப்பது வழக்கம். கடந்த வாரம் கோவில்பட்டி வந்த பொன்ராஜ் , ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு மனைவியுடன் காரில் வந்தார்.
வரும் வழியில் சில இடங்களில் காரை நிறுத்தி பழங்கள் மற்றும் கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியுள்ளார். அதன்பின் ரெயில் நிலையம் வந்தடைந்தார். அங்கு தன் வசம் வைத்திருந்த பைகளில் ஒன்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பையில் 32 பவுன் தங்க நகைகள் இருந்தது. வேலையை தவறவிட்டதை எண்ணி வேதனை அடைந்த பொன்ராஜ்,கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார் அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தியதை தொடர்ந்து பொன்ராஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் இரவு நேரத்திலும் பொன்ராஜ் வந்த வழித்தடங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் அருகில் சாலையோர தள்ளுவண்டி பழ கடையில் மபொன்ராஜ் பழங்களை வாங்கிவிட்டு ஒரு பையை அங்கேயே விட்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்தப் பழக்கடை உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்ட போது யாரோ ஒருவர் விட்டுச் சென்ற ஒரு பை தன்னிடம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அந்த பையை அடுத்த நாள் கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது உறுதியானது. இதையடுத்து பொன்ராஜை தொடர்பு கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தகவலை சொல்லி கோவில்பட்டி வரவழைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து பொன்ராஜ் தனது மனைவி மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை எழுதி வாங்கிக்கொண்டு தள்ளுவண்டி பழக்கடையில் தொலைத்த 32 பவுன் தங்க நகைகளை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் பத்திரமாக ஒப்படைத்தார்.
இரவு நேரத்தில் ஒருவர் ஸ்டேஷனுக்கு வந்து 32 பவுன் தங்க நகைகளை தவற விட்டதாக தெரிவித்த அடுத்த நிமிடமே போலீசார் விழிப்புடன் துரிதமாக செயல்பட்டு நகைகளை பத்திரமாக கைப்பற்றி மீட்டு ஒப்படைத்த சம்பவம் மக்களின் பாராட்டுதலை பெற்றது. மேலும் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.







