மக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.10.2025), கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக உறையாற்றியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்த ஊராட்சியில் 2 குக்கிராமங்களும், 6 வார்டுகளும் உள்ளன . கண்மாயில் கழிவு நீர் கலத்தல், கூடுதலாக எரிமேடை மற்றும் சுடுகாட்டிற்கு சாலை வசதி அமைத்து தருதல், பொது கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட தேவைகள் மற்றும் ம் கருத்துகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர்.

சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துகளின் பெயர்களை நீக்குதல் குறித்து எடுத்துரைத்தல் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த காலகட்டத்தில் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலனி என்ற பெயரை முழுமையாக நீக்க வேண்டும்,
சாதிப் பெயர்கள் தவிர்த்து பொது பெயர்களாக அதற்காக பட்டியலிடப்பட்டுள்ள பெயர்களை அந்த குறிப்பிட்ட ஊர் மற்றும் தெருவைச் சார்ந்தவர்கள் விரைவில் கலந்து ஆலோசனை செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை அரசுக்கு கோரிக்கை செய்து விரைவில் மாற்றுவதற்கு தீர்மானிக்கலாம்.
இக்கூட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், சமுதாய கூடம் கட்டி தருதல் உள்ளிட்ட 8 முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய பயன்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து, நிதிகளை எல்லாம் சம அளவில் பயன்படுத்துவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
சுய உதவிக்குழுக்களுக்கு அனைத்து கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடு மாடுகள் வளர்ப்புக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற வேண்டும். பொதுமக்கள் தெரிவித்த ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் எல்லாப் பகுதிகளின் கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

இக்கிராம சபை கூட்டத்தில் பல்வேறு மக்கள் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் அனைவரும் HIV எய்ட்ஸ் தொடர்பான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.







