ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு; சீமான் பங்கேற்பு

அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் ப. அர்ஜுன் :-இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம்.
ஒளிப்பதிவாளர் செழியன்:-, ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

நடிகர் சிங்கம் புலி:-, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர். நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார். இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்… இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
இயக்குநர் மிஷ்கின்:-, எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு,
தயாரிப்பாளர் தனஞ்செயன்:-“எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது.. அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார்:-, “எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா. படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார்.

ஏடிஜிபி தினகரன் :, “எனக்கு இந்த மேடைப் புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார்.’’மைலாஞ்சி’ படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும். பள்ளியில் படிக்கும் போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தம்பி அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா. தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.
‘இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை’ என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இவ்வாறு சீமான் பேசினார்.







