மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரம்: 3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி நித்யா (35). இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் 5 வயதில் மகன் இருந்தனர்.

இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா தனது கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். அதன்பிறகும் மனைவியை பிரிவை ஏற்க முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நித்யா மறுத்து விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் அந்த பலகாரங்களை ஆசையுடன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது வினோத்குமார், மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் தனது 3 குழந்தைகளையும் கொடூரமாக கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
பின்னர் வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







