கோவில்பட்டியில் தேசிய சமரச தீர்வு முகாம்: விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தேசிய சமரச தீர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் தேசிய சமரச தீர்வு முகாம் நடைபெறுகிறது.

சமரச முகாமில் குடும்ப பிரச்சனை வழக்கு, வாகன விபத்து இழப்பீடு வழக்கு, குடும்ப வன்முறை வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வர்த்தக பிரச்சனை வழக்கு, வங்கி கடன் வழக்கு, பாகப்பிரிவினை வழக்கு மற்றும் இதர உரிமையியல் வழக்குகள், வாடகை தகராறு வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்கு, சமரசமாக முடிக்கக்கூடிய குற்றவியல் வழக்கு உள்ளிட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வக்கீல் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்பப் கூறலாம்.

பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் வழக்கின் தரப்பினர்கள் தாங்களோ அல்லது தங்களது வக்கீலுடன் முன்னிலையாகி, நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். வழக்குகள் சமரச மையத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரசம் ஏற்படவில்லை என்றால் வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்திலேயே நடத்தலாம்.
வக்கீல்களும் வழக்காடிகளும் தங்களது வழக்குகளில் விரைவான தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் பொதுமக்களுக்கு சமரச முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர்கணேஷ், அரசு வக்கீல் சம்பத்குமார், சந்திரசேகர், பெஞ்சமின் பிராங்கிளின் உள்ளிட்ட வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







