79-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி விருதுகள் வழங்கினார்


விருதை மு.க.ஸ்டாலின் வழங்கினார
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இருந்து அவரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.
கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்கு வந்திறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பின்னர் அங்கிருந்த முப்படைகளின் அதிகாரிகள், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண் ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர்.
தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சுதந்திர தின விழாவை காண பல தரப்பினரும் கோட்டை அருகே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை இந்நாளில் நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்!
உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது! ஒவ்வொரு மனிதரும் சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில், நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதுதான் உண்மையான விடுதலையாக இருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







