கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்.) கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், இயக்குநர், சிறப்பு விருந்தினர் மற்றும் துறைத்தலைவர்கள் பட்டமளிப்பு விழா அங்கியுடன் பாரம்பரிய மரபுடன் விழாமேடைக்கு வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
கல்லூரிச் செயலர், ப.மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லுாரியின் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர், பா.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாார்.

விழாவின் சிறப்பு விருந்தினரான, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் உறுப்பினர்செயலர் வின்சென்ட் பேசுகையில்.”, நேர்மை, திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி போன்ற வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் தான் சார்ந்த குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் பணியாற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார். கற்ற கல்வியையும் ஒழுக்கத்தையும் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறியதோடு, மாணவர்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

இதை தொடர்ந்து துறைவாரியாகப் பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. முதல்வர். மூ.சுப்புலெட்சுமி உறுதிமொழியை வழங்க, பட்டம் பெற்றவர்களும் உறுதிமொழியை வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இளங்கலை, இளம் அறிவியலில் 411 பட்டதாரிகளும் முதுகலை 55 பட்டதாரிகளும் ஆய்வியல் நிறைஞர் 1 பட்டதாரியும் என்று 467 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 16 துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகள் பட்டம் பெற்றுக்கொண்டனர். 19 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர் .
அஞ்சல் வழியாக 67 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறுவர் என்ற விபரத்தினை இயற்பியல் உதவிப்பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான ரா.கவிதாமஞ்சு அறிவித்தார்.. பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் ரா.கவிதாமஞ்சு மற்றும் வணிகவியல் துறைத்தலைவர், பழனிக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.







