கவர்னர் தேநீர் விருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் கவர்னர் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 15.8.2025 அன்ற கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
இது தொடராக அமைச்சர் கோவி.செழியன் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் கவர்னர் ஆர்.என். ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதல்-அமைச்சர் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார்.
அந்தத் தடையாணையினை நீக்கிட சுப்ரீம் கோர்ட்டை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், கவர்னர் அவர்கள் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார்.

இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு கவர்னர் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.
இந்தச் சூழ்நிலையில், முதல்-அமைச்சர் 15.8.2025 அன்று கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார். மேலும், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி நானும் 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் , கவர்னர் தேநீர் விருந்தை புறக்கநிப்பாதாக அறிவித்து உள்ளனர்,







