திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைக்கப்பட்டு 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது.

பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கையுடன் 5.17 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய சிவகுகநாதன் பட்டர் கொடியேற்றினார். பின்னர், கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது,
வேத விற்பன்னர்கள் வேதகபாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறைப் பாராயணமும் பாடினர். இதில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குலி ரமேஷ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று நிறைவு பெறுகிறது.







