மோடி சந்திப்பு குறுஞ்செய்தியை காட்டிய ஓ.பன்னீர்செல்வம்; ஆதாரம் கேட்ட நயினார் நாகேந்திரன்
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் தன்னையோ, தனது உதவியாளரையோ ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு கடந்த ஜூலை 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார்
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய குறுஞ்செய்தி கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் “செல்போனில் காட்ட வேண்டாம்; ஆதாரமாக கொடுங்கள்” என பதில் அளித்தார். மேலும் நயினார் நாகேந்திரன் பேச தயாரானபோது பிறகு பேசலாம் எனக் கூறி அண்ணாமலை அழைத்துச் சென்றார்.







