அகில இந்திய ஆக்கிபோட்டி: செகந்திராபாத் அணி அபார வெற்றி; சென்னை அணியினர் `கோல்’ போடமுடியாமல் திணறல்

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்று 24ம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதின.
ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் லவ்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 29-வது நிமிடத்தில் அதே அணி வீரர் காஷிஃப் கான் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
34-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் சுமன் குஜுர் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 43-வது நிமிடத்தில் மீண்டும் அதே அணி வீரர் அர்ஜுன் யாதவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

தொடர்ந்து 4 கோல்கள் போட்ட செகந்திராபாத் அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அவர்களை எதிர்த்து ஒரு கோல் கூட போடமுடியாமல் சென்னை அணியினர் திணறினார்கள்.
53-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ஐயப்பா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இதனால் அவர்களின் கொகோல் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.
இறுதியில் 5:0 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி அபார வெற்றி பெற்றது.
பாலாஜி குமார் மற்றும் பிரவீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் அஜீத் பாண்டே-க்கு வழங்கப்பட்டது.

இன்று மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 6வது லீக்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதுகின்றன.
மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 7வது லீக் போட்டியில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.
இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 8வது லீக் போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.







