கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக., பாஜக கண்டனம்
தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலைய துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. இதையொட்டி அமைச்சர் சேகர் பாபு, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது நினைவிடத்தில் கோவில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
“திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?” என்றும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புத்தூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க. அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.
“பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து தி.மு.க. அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?
அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









