• April 19, 2025

சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

 சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வக்கீல் ஜெகநாத் என்பர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, “அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி மீதான ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *