மதுரை-தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை : சுப்ரீம் கோர் ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும், சாலையின் நடுப்பகுதியிலும் மரக்கன்றுகள், செடிகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேரங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் வைக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மதுரை, தூத்துக்குடி இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தூத்துக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

அதன்படி கடந்த சில நாட்களாக இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிக்கப்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.

சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் மறுபடியும் வழக்கம்போல் கட்டணம்வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, வருகிற 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.








