வீடற்ற ஏழைமக்களுக்கு புதிதாக வீட்டுமனை பட்டா: கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் ரஞ்சனிகண்ணம்மா, கிளைச்செயலாளர் சுரேஷ்குமார், நகரக்குழு உறுப்பினர் சண்முகவேல், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், மாதர் சங்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி,நகர துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகாக்குழு உறுப்பினர் சிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட நரிகுறவர் காலனி மக்களுக்கு கடந்த ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் வழங்கப்பட்டுள்ள கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்களின் வீடுகளை அளவீடு செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீடற்ற ஏழைமக்களுக்கு புதிதாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் மனு கொடுக்க சென்றபோது, கோட்டாட்சியர் க.மகாலட்சுமி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் மக்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து வட்டாட்சியர் சரவணபெருமாளிடம், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டாக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அப்பணிகள் முடிவடைந்தவுடன் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்..
அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.







