பா ஜனதாவில் சேர்ந்தது ஏன்? விஜயதாரணி விளக்கம்
குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ விஜயதாரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தியான விஜயதாரணி 1987 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார்.
இந்நிலையில் தேசிய அரசியலில் ஈடுபட்ட விருப்பம் கொண்ட விஜயதாரணி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் விஜய தாரணி பாஜகவில் சேரப் போவதாக தகவல் பரவியது. இந்நிலையில் இன்று டெல்லியில் விஜயதாரணி பா. ஜனதா மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது மத்திய இணை மந்திரி முருகன் உடன் இருந்தார்.
எம்எல்ஏ பதவி வகிக்கும் விஜயதாரணி, கட்சி மாறியதால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பா ஜனதா சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சொந்த காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மேல் இடத்திற்கு விஜயதாரணிகடிதம் அனுப்பி உள்ளார்.
விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,” பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு மிக அவசியம்.பாஜகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பாஜகவில் சேர்ந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.







