மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி யோகா : ‘பேப்பர் கப்’ மீது அமர்ந்து மாணவ, மாணவிகள் அசத்தல்
பாலித்தீன் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் , பாதிப்புகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் உள்ள எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளியில் “ பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பையை காப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் பள்ளி மேலாண்மை இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆர்வமுடன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.
இதையடுத்து உலக சாதனை நிகழ்த்தும் வகையில் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கார்த்திக் கிருஷ்ணா, பூஜா, சாதனா ஆகிய மாணவ – மாணவிகள் பேப்பர் கப் மீது அமர்ந்து பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பை காப்போம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி கையில் மஞ்சப்பை வைத்து கொண்டு யோகாசனம் செய்து அசத்தினர். இந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் பாலித்தீன் பையை ஒழிப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

இந்நிகழ்வில் சாய் தேவ் தொண்டு நிறுவனர் சைலஜா, பள்ளி முதல்வர் வீரலட்சுமி , சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ – மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்







