இதுவரை 8 பேர் உயிரை பறித்த சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி அமைச்சரிடம் மனு
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் 31 – வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவநை சந்தித்து மனு அளித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். இந்நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டில் மந்தித்தோப்பு பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலையை கோவில்பட்டி நகர மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறுகிய இச்சாலையை அதிகமான மக்கள் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுவரை நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இச்சாலையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். கடந்த கால ஆட்சியில் விரிவாக்க திட்டத்தை கிடப்பில் போட்டதால் இந்த சாலையை விரிவாக்க,ம் செய்யக்கோரி இப்பகுதி மக்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இச்சாலையை விரிவுபடுத்த மக்கள் ஆதரவு உள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகம் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்தித்தோப்பு ரோடு பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கீதாஜீவன், சாலை விரிவாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.







