இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர் மரணம்
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்துவிடம் 3 வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. கட்டிட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தார்.. வைரமுத்துவிடம் 1989 முதல் 3 வருடங்கள் உதவியாளராக இருந்துவிட்டு உதவி இயக்குநராக மாறினார்.
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைகொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள், வாலி, உதயா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.
மாரிமுத்துவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பசுமலைசேரி ஆகும். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இவர்களுக்கு அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா. என்ற மகளும் உள்ளனர்..







