கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.’
அப்போது லாரியின் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது 2 கிலோ வீதம் 300 பேக்குகளில் 600 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
லாரி ஓட்டுநர் பாண்டிச்சேரி ஏனம் பகுதியைச் சேர்ந்த சத்திபாபு (39), லாரியில் இருந்த தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம், கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த பாலச்சந்தர் மகன் ஜான் அற்புத பாரத்(33) ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.







