அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை: கோவிலில் மனு அளித்து த.மா.கா. வினர் பூஜை
தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டி கோவில்பட்டி யில் த. மா . கா. வினர், நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. பி. ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். திருமுருகன் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். ஏ. கனி, நகர பொருளாளர் சண்முகராஜ்,துணைத் தலைவர் ராஜமாணிக்கம் சுப்புராஜ் நகரச் செயலாளர்கள் வின்சென்ட் மணிமாறன் சரவணன் துணை செயலாளர் ஜான் மாரிமுத்து, வட்டார துணைத் தலைவர் செந்தூர்பாண்டியன் கண்ணன் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பொன்ராஜ், வட்டாரத் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஜெய் கணபதி கோவிலில் கோரிக்கை மனுவை வைத்து தேங்காய்கள் உடைத்து சிறப்பு பூஜை நடத்தினர். அவர்களின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :-
தமிழகத்தில் நடந்த கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீடுகளில் உழைக்கும் மகளிரை கவுரவிக்கும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை அடமான வைத்தவர்களின் நகைக்கடன் தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டது. தேர்தலின்போது தி.மு.க.தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, முதல்வரின் மகனும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மகளிர் உரிமைத்தொகை குறித்து தெரிவித்து மக்களிடம் வாக்குகளை பெற்றனர். குறிப்பாக பெண்களின் வாக்குகளை கவர, இந்த மகளிர் உரிமைத்தொகை மிகவும் உதவியாக இருந்தது.
எப்போதுமே தேர்தலின்போது ஒரு பேச்சும், பதவிக்கு வந்தவுடன் ஒரு பேச்சும் பேசுவது திமுகவின் வாடிக்கை. அதனை தற்போது செயல்படுத்துகின்றனர். நகைக்கடன் தள்ளுபடியில் ஏராளமான விதிகளை புகுத்தி, முழுமையாக யாரும் பயனடையவிடாதபடி செய்துவிட்டனர். அதையே தற்போது மகளிர் உரிமைத்தொகையில் பின்பற்றுகின்றனர்.
அதாவது பல்வேறு விதிமுறைகளை கொண்டு அதை செயல்படுத்த உள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை என்று தான் அறிவித்தனர். ஆனால், செயல்படுத்த இருப்பதோ தகுதி உரிமைத் தொகையாக உள்ளது. பல்வேறு தகுதி பார்த்து மகளிர் உரிமைத் தொகை வழங்க உள்ளனர். இது மக்களிடையே பிரிவினைத் தான் உருவாக்கும். அவர்களுக்கு இது எந்தவிதத்திலும் உதவிகரமாக இருக்காது. எனவே, அனைத்து மகளிருக்கு எந்தவித பேதமையும் பார்க்காமல் உரிமைத் தொகையை வழங்கி கவுரவிக்க வேண்டும்.


மேலும், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துகின்றனர். உரிமைத் தொகை என்று பெயர் வைத்துவிட்டு, அதனை ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து உரிமைத் தொகையை தராமல் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் வழங்குவது மகளிரை ஏமாற்றுவதாக கருதுகிறோம். இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு ஊழியர்களுக்கு அரியர் பணம் வழங்குவது போல் மகளிருக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அதிகாரிகளுக்கு நல்லெண்ணம் வரும் பொருட்டு அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி அவர்களிடம் மனு சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.







