”சமத்துவத்தை கடைப்பிடிப்பேன்”- தூத்துக்குடியில் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் உறுதிமொழி
சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு அரசு உறுதிமொழி குறித்து அரசாணை வெளியிட்டது.
அதன்படி நாளை (14.4.2023) சமத்துவ நாளை முன்னிட்டு, இன்று (13.4.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘சமத்துவ நாள்” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும்,
தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,
வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,
நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க
நாம் அனைவரும் பாடுபடுவோம் சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.” என்று ஒவ்வொருவரும் சொல்லி உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன்,. மயில்குமார் உள்ளிட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.







