ஐகோர்ட்டு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து கட்சி முடிவெடுக்கும்- டி.ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
கட்சியில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின்படியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நிலை என்பது கிடையாது, 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஐகோர்ட்டின் தீர்ப்பை விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம், மேல்முறையீடு குறித்தெல்லாம் கட்சிதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.







