ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம்: கலெக்டரின் உத்தரவு நிறைவேறுமா?
ஆட்டோவில் மீட்டர் இல்லாமல் இருப்பதை காணலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கலெக்டர் உத்தரவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூல் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது கூடுதல் தொகை வரும்வகையில் மீட்டருக்கு சூடு வைத்து டிரைவர்கள் ஓட்ட தொட்ங்கினார்கள்.
நாளடைவில் மீட்டர் கட்டணம் முறையை மறந்து குத்து மதிப்பாக கட்டணம் வசூல் செய்ய தொடங்கி விட்டார்கள். இது ஆட்டோ டிரைவர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகிவிட்டது,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் வித விதமான கட்டணம் வசூலித்தாலும் கோவில்பட்டி நகரில் கொஞ்சம் அதிகம்தான். குறைந்த பட்ச தூரம் என்றாலும் ரூ.1௦௦ வாங்கி விடுவார்கள். அதன்பிறகு ரூ.15௦,2௦௦,25௦,3௦௦ என்று கூடிக்கொண்டே போகும். வெளியூர் பயணிகள் என்றால் கேட்க வேண்டாம் 5௦௦ ரூபாயை தாண்டிவிடும்.
அதிகாலை நேரத்தில் வெளியூரில் இருந்து புதிய பஸ் நிலையம் வந்து இறங்கிய ஒரு குடும்பத்தினர், ரெயில் நிலையம் செல்ல ஆட்டோவில் ஏறி இருக்கிறார்கள். அந்த ஆட்டோ டிரைவர் ரூ.6௦௦ கேட்டு இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வெளியூர்க்காரர் பேரம் பேசி ரூ.450 கொடுத்து பயணம் செய்து இருக்கிறார்.
இது போன்ற கட்டண கொள்ளை அடிக்கடி நடப்பது வாடிக்கையாகி விட்டது, இந்த சம்பவத்தை ஒரு நியாயமான ஆட்டோ டிரைவரே சொல்லி வருத்தப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோக்கள் பெர்மிட் புதுப்பிக்கும் பணிக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு செல்லப்படவேண்டும். அந்த சமயத்தில் மீட்டர் பொருத்தி அதிகாரிகளை ஏமாற்றி வேலையை முடித்து கொள்வார்கள்.
பின்னர் அந்த மீட்டரை கழற்றி வைத்து விடுவார்கள். இப்போது ஓடும் ஆட்டோக்களில் மீட்டரையே பார்க்க முடியவில்லை. போக்குவரத்து அதிகாரிகளும் இதை கண்டுகொள்வது கிடையாது. மக்கள் தான் தாங்கள் ஏற்கனவே படும் பல்வேறு கஷ்டத்தோடு இந்த ஆட்டோ கட்டண கொள்ளையிலும் சிக்கி தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பொதுமக்களின் புகார்களை தொடர்ந்து ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
ஆட்டோ மீட்டர் குறைந்த பட்ச கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும், இந்த கட்டணம் ஆட்டோ டிரைவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்குமா? என்பது பற்றி எல்லாம் எதுவும் ஆலோசிக்காமல் உத்தரவிட்டால் மட்டும் உடனே நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை.
மீட்டர் கட்டணம் இல்லாமல் பல ஆண்டுகள் ஆட்டோ ஒட்டி வருபவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டு , மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்து அதன்பிறகு அவர்களை அவ்வாறு கட்டணம் வசூல் செய்ய சொன்னால் சரியாக இருந்திருக்கும்.
ஆனால் அதுபோல் எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை.எனவே தற்போது கலெக்டரின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் எப்படி பின்பற்றபோகிறார்கள், போக்குவரத்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
-S.K.T.S.திருப்பதிராஜன்-







