சரவணன் அருள் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ 5 மொழிகளில் 28-ந் தேதி ரிலீஸ்
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் அருள் தற்போது ஜேடி-ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே அஜித் – விக்ரம் நடித்து அமிதாப் பச்சன் தயாரித்த உல்லாசம் படத்தையும், விசில் படத்தையும் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, நாசர், மயில்சாமி, யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது.
இந்த படத்துக்கு வைரமுத்து, சிநேகன், பா. விஜய், சிநேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் நடன இயக்குனராக பணிபுரிகின்றனர்.
இந்த படத்தின் இசை உரிமம் திங் மியூசிக் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியன் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் திரையரங்குகளில் ஜூலை 28 -ம் தேதி, ரிலீஸ் செய்யப்படுகிறது.







