தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி; கலெக்டர் ஆய்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசும் உதவ முன்வந்தது. இலங்கைக்கு அரிசி, பால்பவுடர் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.மத்திய அரசும் அனுமதி அளித்து விட்டது.
அதனைத் தொடர்ந்து ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடந்த 29.4.2022 அன்று சட்டசபையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக சென்னையில் இருந்து 10ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை முதல்-அமைச்சர் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். அதேபோல் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து வந்துகொண்டிருக்கும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியினை சேகரித்து 10 கிலோ பைகளாக பிரிக்கப்பட்டு 5 பைகளை ஒரு பண்டலாக பொட்டலம் செய்யப்படும் பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தின் அருகில் உள்ள 3 குடோன்களில் நடைபெற்று வருகிறது. அரிசிகள் அனைத்தும் வரப்பபெற்ற பின் துறைமுக கப்பல் வாயிலாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரிசி மூட்டைகள் தயார் செய்யும் பணியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு செய்தார். அவருடன் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் சென்றிருந்தனர்.







