தூத்துக்குடியில் இலவச கோடை கால பயிற்சி முகாம்;2-ந் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் 2.6.2022 முதல் 12.6.2022 வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமானது தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 வரை மட்டும் நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி உபகரணங்கள் வழங்கப்பட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை.
பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தினமும், பிஸ்கட், பால்/தேநீர் வழங்கப்பட்டு, நிறைவு விழாவில் டி-சர்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தூத்துக்குடியில் திறமையான ஏராளமான கடற்கரை இளைஞர்கள் உள்ளதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பயிற்சி முகாமில் கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால், கடற்கரை கபாடி மற்றும் வில்வித்தை ஆகிய புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் நல்லமுறையில் கற்றுக் கொடுக்கப்படும்.
இப்பயிற்சி முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக், பயிற்றுநர்கள், மாவட்ட டென்னிஸ் பந்து கழக தலைவர் க.சேவியர் ஜோதி சற்குணம், செயலர் கண்ணன், நிர்வாகிகள் ஜெயகிருஷ்ணன், அருண்குமார், குமார், புஷ்பராணி புஷ்பராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்