கோவில்பட்டி ஆக்கி மைதானத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு: கண்டனம் வலுக்கிறது

 கோவில்பட்டி ஆக்கி மைதானத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு: கண்டனம் வலுக்கிறது

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டியை சேர்ந்த செய்தியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகி மற்றும் உதவியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் சிலர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேரை வெளியேற சொல்லி இருக்கிறார்கள். ஏன் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பதில் சொல்லாமல் , இந்தி பேச தெரியவில்லை? ஏன் நீங்கள் உள்ளே இருக்க வேண்டும், வெளியே செல்லுங்கள் என்று அவமதிக்கும் வகையில் பேசி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, செய்தியாளர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனரே தவிர தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு
இதற்கிடையே இந்திய தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டியில் ஊடகவியலாளர்களை மதிக்காத போக்கு ஆக்கி நிர்வாகத்திடம் உள்ளது. அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

கடந்த பல நாட்களாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கி போட்டிகள் கோவில்பட்டியில் நடந்து வருகிறது. ஏற்கனவே, நிகழ்ச்சி அழைப்பிதழில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இனாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் பெயர் கூட இடம்பெறாத அளவுக்கு அவர்களை புறக்கணிக்கும் வகையில் தான் செய்யப்பட்டு இருந்தது. இதனை நாம் கண்டித்து இருந்தோம்.
தற்போது, கோவில்பட்டி ஊடகவியலாளர்களை கேவலப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட போட்டி நடத்தும் அமைப்பாளர்களை கண்டிக்கிறோம்.

எந்த ஒரு விளையாட்டு போட்டியிலும் நிறம், மொழி, இனம் போன்ற எந்தவித பாகுபாடு காட்டுவதும் முறை அல்ல. அதே போல அரசியல் கட்சி சார்பு கொண்ட வகையிலும் அமைந்திட கூடாது. அப்படி அமைந்தால் அது அந்த விளையாட்டின் மதிப்பின் மாண்பையே குறைத்து விடும். ஆகவே, கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் லெவல் ஆக்கி போட்டிகள் மிகப்பெரிய அளவில் அரசியல் பின்னணி கொண்ட வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டது.
இது ஏற்புடையது அல்ல. அதனை இந்தியா ஆக்கி நிர்வாகம் தவிர்த்து இருக்கவேண்டும். ஆனால் இந்த போட்டிகளில் அரசியல் கட்சி பின்னணி வலிய திணிக்கப்பட்டு உள்ளது.

அத்தோடு கோவில்பட்டியை சேர்ந்த செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை தரக்குறைவாக நடத்துவது ஏற்புடையது அல்ல. அதனை உடனே சரி செய்து, திரும்பவும் அது போன்ற விருப்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்து கொள்ள தகுந்த நடவடிக்கையை நிர்வாகம் எடுக்கவேண்டும்.
அதுவும் இறுதி போட்டி நடைபெறும் நாட்களுக்குள் சரிசெய்யப்பட வேண்டும். அது தான் கோவில்பட்டி அதாவது ஆக்கிபட்டி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவில்பட்டியில் இன்னும் நிறைய போட்டிகளும், சர்வதேச அளவிலான போட்டிகள் கூட நடத்தப்படவேண்டும் என்பதே தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே, இது போன்ற பிணக்குகள் வராத அளவுக்கு ஆக்கி இந்தியாவின் நடவடிக்கை இருக்கவேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் மத்திய அரசும் தலையிட்டு சரி செய்யவேண்டும்.

இவ்வாறு வக்கீல் ரெங்கநாயகலு கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் வக்கீல் அய்யலுசாமி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் அய்யலுசாமி இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


கோவில்பட்டி செய்தியாளர்களை அவமானப்படுத்திய ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் – காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை விளையாட்டு மைதானம் முற்றுகை செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.
ஆக்கிப்பட்டி என்று அழைக்கப்படும் கோவில்பட்டி நகரில் ஆக்கி வளர்ச்சிக்கும், ஆக்கி வீரர்கள் திறமை வெளி உலகத்திற்கும் தெரியப்படுத்துவதில் கோவில்பட்டி செய்தியாளர்கள் பணி என்பது பாராட்டுக்குரியது. கோவில்பட்டி நகரில் நடக்கும் தேசிய அளவிலான ஆக்கி போட்டியை சர்வதேச ஆக்கி போட்டிக்கு இணையாக செய்திகளை வெளியிட்டு இந்த உலகத்திற்கு காட்டிவரும் பெருமை கோவில்பட்டி செய்தியாளர்களை சாரும்.

அவ்வாறு சிறப்பாக செயல்படும் செய்தியாளர்களை நேற்று ஆக்கி மைதானத்தில் அவமானப்படுத்தும் வகையில் ஆக்கி போட்டியாளர்கள் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.

கடந்த 10 தினங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தியை சேகரித்து வெளியிட்டு வரும் செய்தியாளர்களை அவமானப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயமரியாதை என்பதனை தொடர்ந்து வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர், கனிமொழி தலைவராக இருந்து நடத்தும் ஒரு தேசிய ஆக்கி போட்டியில் செய்தியாளர்களின் சுயமரியாதையை நிலைகுலைய வைக்கும் வகையில் நடந்துகொண்ட விதம் வேதனைக்குரியது மட்டுமல்லாது கண்டிக்கத்தக்கது.

அதிலும் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் போராடும் நிலையில் , இந்தி தெரியவில்லை என்றால் வெளியே போ என்று எங்கோ இருந்து வந்த ஒருவரை வைத்து சொல்ல வைத்து செய்தியாளர்களை அவமானப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்தப் போட்டியை நடத்தும் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, செய்தியாளர்களை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளை இறுதி போட்டி நடைபெறும் போது காங்கிரஸ் கட்சி சார்பில் மைதானத்தின் உள்ளே கண்டன போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு வக்கீல் அய்யலுசாமி கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *