பார்வையாளர்களை மிரளவைத்த `கிடாமுட்டு’
திண்டுக்கல் குட்டியபட்டியில் தமிழ் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டான
கிடாமுட்டு’ இன்று நடத்தப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் ,மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான முரட்டு ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கிடாக்களும் பார்வையாளர்களை மிரள வைத்தன. கிடாக்களை அவற்றின் உரிமையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.
திண்டுக்கல் குட்டியபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இந்த கிடாமுட்டு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் தொழில் அதிபர் கே.எஸ்.எம்.சலீம், நாட்டாமை காஜாமைதீன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தரம் வாரியாக பிரித்து `கிடாமுட்டு’ நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிடாக்களும் பயங்கர ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன.
இந்த காட்சியை பார்க்க பார்வையாளர்கள் குவிந்து இருந்தனர். கிடாக்கள் மோதலை கண்டு ரசித்த அவர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது.
இறுதியில் வெற்றி பெற்ற கிடாக்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை கிடா உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.