• November 1, 2026

போலீசாரிடம் இருந்து தப்பிய கோவை சிறை கைதி பிடிபட்டு மீண்டும் ஓட்டம் 

 போலீசாரிடம் இருந்து தப்பிய கோவை சிறை கைதி பிடிபட்டு மீண்டும் ஓட்டம் 

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ராகவன் (வயது 25) என்பவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காகக் கடந்த ஜூன் மாதம் ராகவனை கோவை மத்திய சிறையில் இருந்து கர்நாடகப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து ராகவன் தப்பி ஓடினார். இது தொடர்பாக கர்நாடகப் போலீசார் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பவானிசாகர் பகுதியில் ராகவன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது உடனே அன்னூர் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் ராகவனை கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் அன்னூர் போலீசார் அழைத்து வந்தனர். சிறை வளாகத்திற்குள் நுழைந்தவுடன், உள்ளே கைதிகளை விசாரிக்கும் அறை அருகே வைத்து ராகவனின் கையில் இருந்த கைவிலங்கை போலீசார் கழற்றினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, கைதி ராகவன் அங்கிருந்த போலீசாரைப் போக்கு காட்டி ஏமாற்றிவிட்டு, சிறை வளாகத்தில் இருந்து வெளியே மின்னல் வேகத்தில் ஓடி தப்பி விட்டார். அங்கிருந்த போலீசாரும் சிறைக் காவலர்களும் அவரைப் பிடிக்க முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை டி.ஐ.ஜி மற்றும் சிறைக் கண்காணிப்பாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்துக் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தப்பியோடிய கைதி ராகவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே தப்பியோடிப் பிடிபட்ட கைதி, மீண்டும் சிறை வளாகத்திலேயே போலீசாரை ஏமாற்றி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *